×

கோத்தகிரி அந்தோணியார் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு துவக்கம்

கோத்தகிரி, பிப்.26: கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்த பள்ளி துவங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1985ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ரூ. 1.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு நவீன வசதிகளுடன், ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய தொடு திரை ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து கொடுக்க முன் வந்தனர்.

இதையடுத்து, பள்ளியில் நவீன தொடுதிரை அமைக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் தலைமை வகித்து, தொடு திரை வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி நூற்றாண்டு விழா கமிட்டியை சேர்ந்த சசிகுமார், சந்தோஷ், ஓய்வு பெற்ற ஆசிரியைகள் மீராபாய், அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் முகமது அலி, ராவணன், மைதிலி, சாதிக் அலி, நாகராஜ், பரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து, சென்னையை சேர்ந்த பொறியாளர் கார்த்திகேயன் ஸ்மார்ட் வகுப்பறையின் சிறப்பு அம்சங்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும், கடந்த 37 வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை மட்டுமின்றி, தினமும் பள்ளியில் குழந்தைகள் திருக்குறள் எழுதி வைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை மற்றும் ஒயிட் போர்டு ஆகியவற்றையும் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார்.

Tags : Kothagiri Antoniyar School ,
× RELATED கொலை செய்ய முயற்சிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு